முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு!

 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் ஊழல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்புடைய 26 இடங்களிலும், அவரது நண்பர் சந்திரசேகர் தொடர்புடைய 10 இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னையில் 10, கோவையில் 9, திருச்சி, தாம்பரம்,ஆவடி, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதாகவும் எஸ்.பி வேலுமணி மீது புகார் கூறியுள்ளனர்.

அதேபோல் தேசிய மருத்துவ குழு விதிக்கு முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு சி.விஜயபாஸ்கர் சான்று தந்தாக புகார் எழுந்துள்ளது. விஜயபாஸ்கர் மீதான புகாரில் ஆவணங்களை கைப்பற்ற 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை என தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அருகே மஞ்சங்காரனையில் புதிய மருத்துவக்கல்லூரி தொடங்க வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி அளித்துள்ளார். 250 படுக்கைக்களுடன் மருத்துவமனை முழுமையாக இயங்கி வருவதாகவும் தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து சி.விஜயபாஸ்கர் உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையில் 5, சேலத்தில் 3 , மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தாம்பரம், தலா ஒரு இடம் என 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.