நெல்லையில் பதற்றம்.. கோயில் விழாவில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து!

 

படுகாயமடைந்த எஸ்.ஐ மார்க்ரேட் திரேஷாவுக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற இடத்தில் அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதற்காக பாதுகாப்பு பணிக்கு காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா  உள்பட காவலர்கள் பழவூர் சென்றிருந்தனர்.

கோவில் கொடை விழா முடிந்த பிறகு அங்கு வைக்கட்டு இருந்த பிளெக்ஸ் போர்டுகளை அகற்றும் போது ஆறுமுகம் என்ற நபருக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. வாக்கு வாதத்தின் போது ஆறுமுகம் திடீரென காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளரை சக காவலர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  

ஏற்கனவே, காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆறுமுகம் மீது ஏற்கனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கைப் பதிவு செய்தது எஸ்.ஐ மார்க்கரேட் திரேஷாதான் என்று சொல்லப்படுகிறது. இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு ஆறுமுகம் கத்தியால் குத்தியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.  

கோவில் கொடைவிழாவில் காவல் உதவி ஆய்வாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆறுமுகத்தை பிடித்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவல் உதவி ஆய்வாளரை, நெல்லை சரக டிஐஜி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதேபோல், சம்பவ இடத்திற்கும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.