ஆசிரியர் பணிநீக்கம்: சாட்டை பட பாணியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

 

பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி சாட்டை பட பாணியில் பள்ளி வாசலில் மாணவ மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சந்திரசேகரன் என்ற ஆசிரியர் பள்ளி நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் மாணவிகளை அடித்ததாக கூறி எழுந்த புகாரில் அவரை பள்ளியை விட்டு நிர்வாகம் நீக்கியது.

ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்ட தகவல் அறிந்த அப்பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். அப்போது பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்து பள்ளி வளாகத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் மீண்டும் சந்திரசேகரனை பணியமர்த்த உத்தரவிட்டார். இதனையடுத்து வீட்டில் இருந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகத்தினர் கார் வைத்து அழைத்து வந்தனர்.

அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளிடம், ஆசிரியர் சந்திரசேகரன் சமுத்திரக்கனி நடித்திருந்த சாட்டை பட பாணியில் மாணவர்களை நோக்கி கையெடுத்து வணங்கி பள்ளிக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். இதனை கண்டு உற்சாக குரல் எழுப்பிய மாணவ மாணவிகள் ஆசிரியரின் காலை தொட்டு வணங்கியபடி, அவரை கண்ணீர் மல்க மீண்டும் வகுப்பறைக்கு அழைத்துச் சென்ற நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.