பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனிக்கு மாநில இளைஞர் விருது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே குரவப்புலம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவரஞ்சனி. பொறியியல் பட்டதாரியான இவர், அவருடைய கணவர் தனியார் சித்த மருத்துவ கல்லூரி பேராசிரியருமான சரவணகுமார் இருவரும் சேர்ந்து பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் நெல் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள் பயிரிடுதலில் ஆர்வமிக்கவர். அத்துடன் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து வரும் இவர் தமிழக நெல் ரகமான 174 உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்கொழிந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெல் ஜெயராமனுக்கு பின் பல மாநிலங்களுக்கு சென்று 1,250 நெல் ரகங்களை சிவரஞ்சனி மீட்டு எடுத்தார். இதன் காரணமாக முதல்வர் மாநில விருது இளைஞர் விருதுக்குத் தேர்வாகியுள்ள இவருக்கு சுதந்திர தின விழாவில் விருதும், ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
அதேபோல, சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய வகையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார், ஸ்ரீகாந்த் ஆகிய இருவருக்கும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது ஆஷிக் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நடைபெற உள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தில் விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.