திமுகவில் இருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன்!! திமுகவினர் அதிர்ச்சி 

 
திமுக துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அக்கட்சியில் இருந்தும் தனது பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது கட்சி தலைமையிலும் கட்சியினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவில் தலைவர் பதவிக்கு அடுத்து, பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் துணை பொதுச் செயலர் பதவிகள் முக்கியமாக உள்ளன. தற்போது துணைப் பொதுச்செயலாளர் பதவியில் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராஜா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் துணை பொது செயலாளரும், மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் குறித்து நேற்று பரபரப்பு தகவல்கள் பரவின. அதில் அவர் தனது பதவியை ராஜினமா செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இதனால் கட்சியினர் மத்தியிலும், அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை உறுதி செய்யும் வகையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்கவில்லை. இதனால் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா தகவல்கள் உண்மைதானோ என்று பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். கடந்த 2009-ம் ஆண்டு முதல் நான் கட்சி பணிகளை மட்டுமே செய்து வந்தேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது ராஜினாமா குறித்து கடந்த ஆகஸ்டு 29ம் தேதியே விலகல் கடிதம் சமர்ப்பித்துவிட்டதாகவும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பங்கிரங்கமாக தெரிவித்துள்ளார்.
திமுகவின் துணை பொது செயலாளர் சுப்புலட்சுமியின் இந்த திடீர் பதவி விலகல் கட்சியினர் மத்தியிலும் அரசியல் களத்திலும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.