மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி... டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.! தமிழ்நாடு அரசு அதிரடி

 

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்று கொண்ட விவகாரம் தொடர்பாக டீன் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் என்ற உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது.

இதனையடுத்து, சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றது தொடர்பாக விளக்கமளிக்குமாறு கல்லூரி முதல்வர் ரத்னவேல் அவர்கள் விளக்கமளிக்க மருத்துவ கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டது.

தேசிய மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் இருந்து உறுதிமொழி படிவம் பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும், தன்னிடமும், பேராசிரியரிகளிடம் அதனை காட்டாமல் மாணவர் சங்க தலைவரே வாசித்துவிட்டதாகவும் கல்லூரி முதல்வர் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கையில் ஹிப்போகிராட்டிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் உறுதி மொழி எடுத்தது கண்டிக்கத்தக்கது எனவும், இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.