செம ஜாலி! மக்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் இலவச அனுமதி!!

 

உலக பாரம்பரிய வாரம் இன்று துவங்கும் நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணியருக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

உலகின் மரபுச் சின்னங்களை பாதுகாக்கவும், வரலாற்றை இளம் தலைமுறையினர் அறியவும், ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினமாகவும், நவம்பர் 19 முதல் 25-ம் தேதி வரை உலக பாரம்பரிய வாரமாகவும் கடைப் பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, புராதன சின்னங்களைப் பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் நாடு முழுவதும் மத்திய தொல்லியல் துறை சாா்பில், உலக பாரம்பரிய வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பாரம்பரிய வாரம் சனிக்கிழமை (நவ.19) நாடு முழுவதும் தொடங்குகிறது. பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில், 5 ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுக் கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

வழக்கமாக மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களைக் கண்டுகளிக்க 15 வயதுக்கு மேற்பட்ட உள்நாட்டு பயணிகளுக்கு நபா் ஒருவருக்கு 40 ரூபாயும், வெளிநாட்டுப் பயணிகளுக்கு நபருக்கு 600 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மதுரை திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வார காலம் கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.