மூத்த பத்திரிக்கையாளர் துரை பாரதி திடீர் மரணம்!! முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

 

மூத்த பத்திரிகையாளரும் கவிஞருமான துரை பாரதி என்கிற வித்யா சங்கர் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.

1988-ல் இருந்து 91 வரை நக்கீரன் இதழின் ஆசிரியராக பணியாற்றிய துரை, இந்த இதழின் முதல் ஆசிரியராக பணியாற்றியவர். வித்யா சங்கர் என்ற புனை பெயரில் பல கவிதைகளும் எழுதினார். கோவில்பட்டியை சேர்ந்த துரை அதன்பின்  தனியாக பத்திரிகை தொடங்கினார்,  வெவ்வேறு பத்திரிகைகளில் பணியாற்றினார்.

தற்போது வின் தொலைக்காட்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். கடைசி நாள் வரை தனது பத்திரிகை நண்பர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த துரை நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு  காலமானார்.

தனது பத்திரிகை பயணத்தில் பல இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கியவர் துரை என்கிற வித்யா சங்கர். மேலும் தன்னை பத்திரிகையாளர் என்பதோடு கவிஞர் என்ற அடையாளத்தை அதிகமாக விரும்பியவர். துரையின் மறைவுக்கு பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழில் புலனாய்வு இதழியலின் முன்னோடியாக விளங்கி பல இதழியலாளர்களை உருவாக்கியவர் துரைபாரதி பலஆண்டுகளாக துடிப்போடு பணியாற்றிய துரைபாரதியின் மறைவு தமிழ் இதழியல் துறைக்கு பெரும் இழப்பு எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.