12 ஆண்டுகளாக வயிற்றில் கத்தரிக்கோல்.. பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

 

பிரசவத்தின்போது வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள வி.கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (38). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குபேந்திரி (33). அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 15-ம் தேதி திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இவர்களுக்கு தற்போது, 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. பிரசவத்துக்கு பிறகு குபேந்திரிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 18-ம் தேதி இவருக்கு கடுமையாக வயிற்று வலி ஏற்பட்டதால், குபேந்திரியை, அவரது கணவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு, குபேந்திரியின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் மருத்துவர்கள் ஸ்கேன் அறிக்கையை பாலாஜியிடம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாலாஜி அவரது மனைவியை சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு கத்தரிக்கோல் அகற்றப்பட்டது.

எனினும், அங்குள்ள மருத்துவர்களும் கத்தரிக்கோல் தான் வயிற்றுக்குள் இருக்கிறது என சொல்லாமல், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மட்டுமே பாலாஜியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்த விவரம் தெரிந்த பாலாஜி, பிரசவத்தின்போது அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் அறிக்கையைத் தர மறுத்த மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார். இந்தத் தகவல் செய்தியாக வெளியான நிலையில், அதை அடிப்படையாகக் கொண்டு இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்தது.

வழக்கை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், குபேந்திரிக்கு ஒரு மாத காலத்துக்குள் ரூ.10 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அந்தப் பணத்தை சம்மபந்தப்பட்ட மருத்துவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.