சென்னையில் ரூ.2 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!!

 
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க,‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’என்ற சிறப்பு நடவடிக்கையை தமிழக காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

அதில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போதை பொருட்களை ஒழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனையில் ஈடுபடுவர்களை கைது செய்து சிறையில் அடைத்தும் தொடர்ச்சியாக இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைதும் செய்தனர்.

இந்த நிலையில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் துறைமுகம் உதவி ஆணையர் வீரக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் வடக்கு கடற்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணடி தம்புசெட்டித் தெரு பகுதியில் இன்று மதியம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் மடக்கி மேற்கொண்ட சோதனையில் காரின் பின்புறம் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் காரில் பணத்துடன் வந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிடிபட்ட  நபர்கள் ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்த ஜெய்சங்கர் (46), டிரைவர் நாராயணன் (35) என்பது தெரியவந்தது. மேலும், பிடிபட்ட தொகை சுமார் 2 கோடி ரூபாய் என்பதும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை விசாரணையில் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடி ரூபாய் பணமும், பிடிபட்ட இருவரையும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.