சென்னையை அதிர வைத்த வழிப்பறி... தமிழ்நாட்டையே உலுக்கிய ட்ரிபிள் மர்டர்... பிரபல ரவுடி கைது

 

தமிழ்நாட்டையே அதிர வைத்த குற்ற சம்பவங்களை நிகழ்த்திய குற்றவாளியை தனிப்படை போலீசார் பெங்களூருவில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி இரவு டீக் குடிக்க வந்த திருவல்லிக்கேணி அப்பாவு தெருவை சேர்ந்த முகமது ஹர்ஷத் (22) என்ற இளைஞரை நான்கு இருசக்கர வாகனங்களில் வந்த எட்டு நபர்கள் பட்டாக் கத்தியால் வெட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பிடுங்கிவிட்டு தப்பி சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அன்று இரவே சென்னை அண்ணா நகர் 4-வது மெயின் ரோடு ‘Q’ ப்ளாக் பகுதியில் எட்டு பேர் கொண்ட மர்ம  கும்பல் ஒன்று பட்டாகத்தியுடன் சாலையில் வரும் வாகனங்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இதில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சென்னையையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் திருவல்லிக்கேணி போலீசார் சிசிடிவி காட்சிகளில் தேடி வந்த ரவுடி கும்பலும், அண்ணாநகர் பகுதியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட ரவுடி கும்பலும் ஒரே கும்பல் என தெரியவந்தது. குறிப்பாக சென்னை போரூர், காந்தி நகர், செட்டியார் அகரம் பகுதியைச் சேர்ந்த இளங்கோ (28) என்ற பிரபல ரவுடி தலைமையிலான கொள்ளை கும்பல் தான் இரண்டு சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து அண்ணாநகர் போலீசாரும் திருவல்லிக்கேணி போலீசாரும்  ரவுடி இளங்கோ தலைமையிலான வழிப்பறி கொள்ளை கும்பலை வலை வீசி தேடி வந்தனர். அண்ணா நகர் வழிப்பறி  சம்பவத்தில் தினேஷ் என்கிற பாவாடை தினேஷ் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரை அண்ணா நகர் போலீசார் கைது செய்தனர். அதேபோல திருவல்லிக்கேணி பகுதியில் வழிப்பறி செய்த சம்பவத்தில் இரண்டு நபர்களை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.

ஆனால், இந்த இரண்டு சம்பவங்களிலும் முக்கிய குற்றவாளியான ரவுடி இளங்கோ உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் பலர் தலைமறைவாக இருந்து வந்தனர். இதனையடுத்து  திருவல்லிக்கேணி துணை ஆணையர் தனிப்படை போலீசார் முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி இளங்கோ பெங்களூரில் தலைமறைவாக இருப்பதை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்து அங்கு சென்று இளங்கோவை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

கைது செய்யப்பட்ட இளங்கோவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இளங்கோவையும் அவரது காதலியையும் பிரித்ததாக கூறி கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஸ்ரீதர் (55) என்ற நபரை நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து கத்தியால் வெட்டி கொலை முயற்சி செய்துவிட்டு இளங்கோவும் அவரது நண்பர்களும் தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவத்தில் திருவல்லிக்கேணி போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்போது இளங்கோ தலைமறைவானதால் இளங்கோவின் நண்பரான நரேஷ் மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவத்திற்கு அடுத்ததாக வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கெம்மராஜபுரம் கிராமத்தில் மூன்று இளைஞர்கள் ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டறிந்து உடலை மீட்டனர். இந்த மூன்று நபர்களையும் கொலை செய்தது இளங்கோ மற்றும் அவரது நண்பர்கள் என்பதும் கொலை செய்து ஓர் ஆண்டுக்குப் பிறகு  கண்டறியப்பட்டு வேலூர் மாவட்ட போலீசாரால் இளங்கோ மற்றும் அவரது நண்பர்களை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் சிறையில் இருந்த இளங்கோ சமீபத்தில் நீதிமன்ற பிணையில் வெளியே வந்ததும் வெளியே வந்தபின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் தான் தனது காதலியை தன்னிடமிருந்து பிரித்த ஸ்ரீதரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திருவல்லிக்கேணி பகுதிக்கு தனது நண்பர்களோடு வந்ததும் அப்போது ஸ்ரீதர் வீட்டில் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். அப்போது வரும் வழியில் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த முகமது ஹர்ஷத் என்ற இளைஞரை பட்டா கத்தியால் வெட்டி மொபைல் போன் மற்றும் பணம் ஆகியவற்றை பிடுங்கி சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், திருவல்லிக்கேணியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு அன்று இரவே அண்ணா நகர் பகுதியில் பட்டா கத்திகளுடன் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை தாக்கி அவர்களிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றதும் அதற்கு அடுத்தடுத்த தினங்களில் திருமங்கலம், போரூர் போன்ற பகுதிகளில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதும் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

குறிப்பாக இளங்கோ இரவு நேரங்களில் மட்டுமே ரவுடிசம் செய்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்டுள்ள ரவுடியான இளங்கோ மீது சென்னை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட இளங்கோவிடம் திருவல்லிக்கேணி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.