ரெட் அலர்ட் வாபஸ்.. கனமழை இருக்கு.. வானிலை ஆய்வு மையம்

 

ரெட் அலெர்ட் எச்சரிக்கை திரும்ப பெறப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து தென்மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு இலங்கை பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில் தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது வட தமிழக கடலோரப் பகுதி மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வருகிறது.

இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் அதி கனமழையும் , நாளை முதல் நவம்பர் 16 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நேற்று நிர்வாக காரணங்களுக்காக  தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் எச்சரிக்கையானது திரும்ப பெறப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.