ரேஷன் கார்டுக்கு ரூ. 1,000... சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவு!!

 

சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூர் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தும், பல ஏக்கரில் பயிர்களை மூழ்கடித்தும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும், 4,655 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 108 கால்நடைகள் உயிரிழந்துள்ளதோடு, 271 ஓட்டு வீடுகள் இடிந்துள்ளது, 231 குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதல்வர் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 1,000 வழங்க உத்தரவிட்டுள்ளார். நேற்று (14.11.2022) மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதல்வர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மேலும் கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.