மாணவி ஸ்ரீமதி வழக்கை யாரும் புலன் விசாரணை நடத்தாதீங்க.. சிபிசிஐடி எச்சரிக்கை!!

 

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக வீடியோ, பதிவுகள் வெளியிட வேண்டாம் எனவும் மீறி வெளியிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிபிசிஐடி எச்சரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 13-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலானய்வு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீடியோ, கண்காணிப்பு கேமரா பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றையும், போராட்டக்காரர்கள் விட்டுச்சென்ற வாகனங்களில் உள்ள பதிவெண் ஆகியவற்றை கொண்டு ஆள் அடையாளம் கண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே, மாணவியின் மரணம் தொடர்பான வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஐந்து பேரும் கடந்த மாதம் 27-ம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஒருநாள் சிபிசிஐடி காவல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், நீதிபதி புஷ்பராணி வீட்டில் ஆஜர்படுத்திய பின் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் வருகின்ற 10-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், மாணவி மரணம் தொடர்பான வீடியோ வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிசிஐடி எச்சரித்துள்ளது. வீடியோக்களை வெளியிடுவது மாணவியின் மரணம் குறித்த புலனாய்வு விசாரணையின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்றும் இதனால் மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்றும் மீறினால் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்படும் எனவும் நீதியை நிலைநாட்டுவதற்கும், நியாயமான புலன் விசாரணைக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் தனி நபரோ அல்லது நிறுவனமோ இதுபோன்ற புலன் விசாரணையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வழக்கு தொடர்பாக யாருக்கேனும் தகவல் கிடைத்தால் சிபிசிஐடி உயரதிகாரியின் செல்போன் எண்ணுக்கு 9003848126 தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வழக்கின் புலன் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது என்றும் சிபிசிஐடி சுட்டிக்காட்டியுள்ளது.