மாணவர்களுக்கு புதிய திட்டம்... சத்துணவில் கோழிக்கறி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

 

தமிழ்நாட்டில் சத்துணவில் வாரம் ஒருநாள் சிக்கன் கறி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின்ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த 1962-ல் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பள்ளி மாணவ மாணவியருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பின், 1982-ல் முதல்வரான எம்.ஜி.ஆர், சத்துணவு திட்டம் என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்டு, அதற்கென தனி துறை உருவாக்கப்பட்டது. மீண்டும் முதல்வரான கருணாநிதி, சத்துணவில் முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

தற்போது 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, ஆண்டுக்கு 220 வேலை நாட்களில் கலவை சாதம், முட்டை மசாலா வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழம் வழங்கப்படுகிறது. மதிய உணவு தவிர, வாரத்திற்கு ஒருமுறை, வேக வைக்கப்பட்ட கருப்பு கொண்டைக் கடலை அல்லது பச்சைப் பயறு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி அண்ணாதுரை பிறந்தநாளில், அரசு துவக்க பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில், மேற்கு வங்கத்தை போல, தமிழ்நாட்டிலும் 10-ம் வகுப்பு வரை சத்துணவுடன் வாரம் ஒருமுறை கோழிக்கறி வழங்க, அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பிராய்லர் கோழிப் பண்ணை உரிமையாளர்களுடன், சில அமைச்சர்கள் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினமான ஜூன் 3-ல் கோழிக்கறி வழங்கும் திட்டம் துவங்கப்பட இருப்பதாக, திமுகவினர் தெரிவிக்கின்றனர். அசைவம் சாப்பிடாத குழந்தைகளுக்கு, என்ன வழங்குவது என்பது தொடர்பாக, மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.