ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு... உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

 

கல்லூரிகளில் நடந்து வரும் சமீபகால பிரச்சனைகளை கருத்தில் கொண்டு பேராசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கின் போது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டது. அப்போது ஆசிரியர்கள் பலர் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர் பணியில் இருப்பவர்களே இதுபோன்று நடந்து கொள்வது அனைத்து தரப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.

அப்போது முதல் தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விஷயங்களில் கூடுதல் அக்கறை செலுத்த தொடங்கியுள்ளது. மாணவர்கள் நடந்து கொள்ளும் விதிமுறைகளை கொண்டு வந்தது போலவே, பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவர்களின் செயல்களுக்கான விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. அதன்படி ஆசிரியர்கள் நடப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக உயர் கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

அந்த கடிதத்தில், அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும் என்றும், பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.