காதல் திருமணம்... மருமகனை அடித்து மகளை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற பெண் வீட்டார்.. பரபரப்பு சிசிடிவி காட்சி!!

 

தென்காசி அருகே காதல் திருமணம் செய்த நிலையில் மருமகனை அடித்து மகளை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்ற பெண் வீட்டாரின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே கொட்டாகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து தற்போது அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் வினித் சென்னையில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த நவீன் பட்டேல் தென்காசி பகுதியில் 20 ஆண்டுகாலமாக மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கிருத்திகாவும், வினித்தும் பள்ளி பருவம் முதல் ஒன்றாக படித்து வரும்போதே ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக திருமணம் செய்து அதை பதிவு செய்துள்ளனர். திருமணம் செய்த நிலையில் பாதுகாப்பு கேட்டு குற்றால போலீசாரிடம் மனு அளித்தும் உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் காலமாக இருவரும் இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். பொங்கல் அன்று கோவிலுக்கு சென்று வீடு திரும்பும்போது இவர்களது காரை வழிமறித்து பெண் வீட்டார் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக குற்றாலம் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தமிழ்நாடு முதல்வர் பிரிவிற்கு புகார் அளித்துள்ளனர். முதல்வர் பிரிவிற்கு புகார் அளித்ததால் புகார் குறித்து குற்றாலம் போலீசாருக்கு  அழுத்தம் வரவே கொடுத்த புகாரை திரும்பபெற மகன் வீட்டாரை போலீசார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று மதியம் தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் உறவினர் வீட்டில் வினித் தன் மனைவி கிருத்திகா மற்றும் பெற்றோருடன் இருந்த நிலையில் அடியாட்களுடன் அங்கு வந்த பெண் வீட்டார் வினித் மற்றும் அவரது பெற்றோரை அடித்து கார்களை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கிருத்திகாவின் சம்மதமின்றி அவரையும் அடித்து வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளனர்.


இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பெண்ணின் உயிருக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் இருந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு பெண்ணை பத்திரமாக மீட்டு தரவேண்டும் எனவும்,  கொலைவேறி தாக்குதல் நடத்திய பெண் வீட்டார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையில், தற்போது பெண்ணை தூக்கி சென்ற சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் மீண்டும் இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.