மாணவர்களுக்கு நேரடி வகுப்பு... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்றோர்கள்..!

 

மாணவ, மாணவிகளின் 300 மேற்பட்ட பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன் அறிவிப்பின்றி குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி (17). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு பயின்று வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 13-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்து, தொடர்புடைய பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி மூடப்பட்டிருந்தது.

இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதால், நேரடி வகுப்புகள் தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறினார்.

அதே போல் மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என கூறியிருந்தார். இந்த சூழலில் பள்ளியை திறக்க வேண்டும் என கடந்த மாதம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதேசமயம் பெற்றோர்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மூடப்பட்ட பள்ளியை விரைவில் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், கனியாமூர் சக்தி பள்ளியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், உடனடியாக பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகளின் 300 மேற்பட்ட பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன் அறிவிப்பின்றி குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கலவரத்தினால் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மட்டுமின்றி அதனை தொடர்புடைய இசிஆர் இன்டர்நேஷனல் என்னும் சிபிஎஸ்இ பள்ளியும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு பள்ளிகளில் படித்துவரும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது என பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர்.