குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை மரணம்.. மருத்துவர்கள் அலட்சியம்? உறவினர்கள் சாலைமறியல்

 

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழந்தற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு எற்பட்டது.

சென்னை பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலை பகுதியில் இரட்டை மலை சீனிவாசன் தெருவில் வசித்து வருபவர் மகேந்திரன். இவரது மனைவி ஆனந்தி (எ) ஆஷா. இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ள நிலையில், ஆனந்தி 2வது முறையாக கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பணியான இவர் கடந்த 14-ம் தேதி பிரவசத்துக்காக குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது உடல் நிலை பலவீனமாக இருப்பதாக கூறி ரத்தம் தேவைபடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தம் ஏற்பாடு செய்யபட்டு அறுவை சிகிச்சை மூலம் செவ்வாய்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருந்த குழந்தை மூச்சுத் திணறல் காரணமாக நேற்று காலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் குழந்தையின் தந்தை மகேந்திரன் ஜி.எஸ்.டி. சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் சாவியை எடுத்துக் கொண்டு வந்து வைத்துக்கொண்டு, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை முன்பு நடந்த இப்போராட்டத்தை, போலீசார் வந்து பேச்சுவார்த்தை செய்து சாவியை வாங்கிக்கொடுத்தனர். இதன் பின்னரும் கூட, ‘மருத்துவர்களின் அலட்சியமே குழந்தை உயிரிழப்பிற்கு காரணம்’ என உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் பழனிவேலிடம் கேட்ட போது, “குழந்தைக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரசவத்தின் போதே மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து படிவத்தில் பெற்றோரிட்ம் கையொப்பம் வாங்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட போது செவிலியர்கள் இருந்ததனர். பின்னர் மருத்துவரும் வந்து சிகிச்சை அளித்ததுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு, இதற்கு முன்னதாகவே இரண்டு குழந்தைகள் 6 மாதம் மற்றும் 8 மாதம் என்றிருந்தபோது, கருவில் கலைந்துள்ளது. அதற்கு மரபணு குறைபாடு இருக்கலாம். ஆகவே மருத்துவர்களின் அலட்சியம் காரணமல்ல” என்று கூறினார்.