பள்ளி சொத்துக்களை தேசம் செய்தால்... பெற்றோரே பொறுப்பு - அதிரடி உத்தரவு

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி (17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே, கடந்த 13-ம் தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் திடீரென கலவரமாக மாறியது. அந்தக் கலவரத்தின்போது பள்ளிக்குள் சென்ற சிலர் பள்ளி வாகனங்களையும், சான்றிதழ்களையும் தீயிட்டு கொளுத்தினர். மேலும் மேஜைகளையும், நாற்காலிகளையும் தூக்கி சென்றனர். இதற்கிடையே நிலைமை கைமீறி சென்றதால் காவல் துறையினர் துப்பாக்கிச்சுடும் நடத்தினர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இன்று கூட்டம் நடத்தியது. இதனையடுத்து கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், “மாணவர்கள் பள்ளி சொத்துக்களை சேதமடையச் செய்தால், அதற்கான பொறுப்பை பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ ஏற்க வேண்டும். அந்த சொத்துக்களை மாற்றி அமைத்து தரக்கூடிய பொறுப்பையும் அவர்கள் ஏற்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்கள் புகைப் பிடிப்பது, பிற மாணவர்களை அடிப்பது, கேலி செய்வது, ஆசிரியர்களிடம் மரியாதை குறைவாக நடந்துகொள்வது என பலவிதமான தவறுகளை செய்கிறார்கள். அந்த மாணவர்களை திருந்த செய்வதற்கும், அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களை, அருகில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு மாற்ற வேண்டும்” என குறிப்பிட்டிருந்தது.