புதிய உடலில் நான்.. நித்தி 2.0 வர்ஷேன் - சாவே பயந்து ஓடும்டா!!

 

மூன்று மாதங்களுக்கு பிறகு குருபூர்ணிமா நிகழ்வில் தோன்றிய நித்தியானந்தா, புதிய உடலில் மாறி வந்திருப்பதாக பேசி இருக்கிறார்.

பாலியல் வழக்கு, கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா, 2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். இந்துக்களுக்கு என தனி கைலாசா நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக பிரகடனபடுத்திய அவரை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் எங்கிருக்கிறார் என இதுவரை கண்டறிய முடியவில்லை.

அவ்வப்போது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவுகளை சமூக வலைதளங்களின் வாயிலாக ஆற்றி வந்த அவர், கடந்த சில வாரங்களாக செயல்படாமல் இருந்தார். இதனால் அவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் அவர் மரணமடைந்து விட்டதாகவும் பீதி கிளப்பி வந்தனர். அவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அவரே கைப்பட எழுதிய கடிதம் ஒன்றினை வெளியிட்டார்.

இந்த நிலையில், கடந்த மூன்று மாதமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். தான் சமாதி மனநிலையை அடைந்திருப்பதாகவும், விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என்றும் அவரே கூறியிருந்தார். இந்த நிலையில், நித்தியானந்தா ஜூலை 13-ம் தேதி குருபூர்ணிமா நிகழ்வில் நிச்சயம் பக்தர்கள் மத்தியில் பேசுவார் என அவரது சீடர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று குருபூர்ணிமாவை முன்னிட்டு கைலாசாவின் யூடியூப் சேனலில் நித்தியானந்தா மீண்டும் 3 மாதங்களுக்கு பிறகு பேசினார். அப்போது பேசிய நித்தியானந்தா, "இது அப்டேட்டான புதிய ஆரம்பம். 42 ஆண்டுகளுக்கு பின் மேம்படுத்தப்பட்ட புதிய தொடக்கத்தை வைக்கிறேன். கடந்த ஏப்ரல் 13-ம் தேதி முதல் ஜூலை 13-ம் தேதி வரை என் உடல், மூளை அனைத்தும் மாறி இருக்கிறது. இது என்னுடைய புதிய உடல். அதை தவறாக பலரும் வெளிப்படுத்தினார்கள். கைலாசாவும் அப்டேட் ஆகியுள்ளது. கடந்த ஏப்ரல் 13-ம் தேதி லிங்கோபத்வரை ஒளியாக நான் பார்த்தவுடன் அனைத்தும் மறந்துவிட்டது.

சாவே என்னை பார்த்தால் பயந்து ஓடும்டா.. நான் மாறவில்லை. உடல் மாறியுள்ளது. என்னிடமும், பூஜைகளிலும் மாற்றத்தை காண்பீர்கள். இறப்பு கூட உங்களுக்கு அதிக புரிதலை தந்து மனிதராக மாற்றும். உங்கள் உடல் இறப்பதற்கு முன் உங்கள் மன பல முறை இறப்பது நல்லது. அப்போதுதான் வெவ்வேறு வாழ்கையை ஒரே உடலில் வாழலாம். இன்னும் எனது சமாதி நிலை முடியவில்லை” என்றார்.