பிரம்மாண்ட விழா மேடை.. மெகா கறி விருந்து..  50 ஹைடெக் கவுன்ட்டர்கள்... அமைச்சர் மூர்த்தி இல்ல விழா!!

 

வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தியின் மகனுக்கு மதுரையை வியந்து பார்க்கும் அளவுக்கு மிகப் பிரம்மாண்டமாகத் திருமண விழா நடந்தது.

மதுரை வெளிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.மூர்த்தி. நீண்டகால திமுக உறுப்பினரான இவர், 2006-ம் ஆண்டு முதன்முறையாக சோழவந்தான் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் 2016 மற்றும் 2021-ம் ஆண்டு மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் வணிக வரி, பதிவுத்துறை அமைச்சராக உள்ளார்.

இந்த நிலையில் மூத்த மகன் தியானேஷுக்கும், திருச்சியைச் சேர்ந்த ஸ்மிர்தவர்ஷினிக்கும் இன்று காலை திருமணம் நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இதற்காக மதுரை பாண்டி கோயில் அருகே 32 ஏக்கரில் விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது. 1 லட்சம் பேர் அமரும் வகையில் பந்தலும, ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. மொய் வசூலிப்பதற்காக தனியார் நிறுவனம் மூலம் 50 ஹைடெக் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.

திருமண விழாவில் பங்கேற்றவர்களுக்கு கறிவிருந்து நடந்தது. இதற்காக 2 ஆயிரம் ஆடுகள், 5, ஆயிரம் கோழிகளுடன் பிரியாணி உள்ளிட்ட அசைவ வகைகள் பரிமாறப்பட்டன. சைவ விருந்துக்கு தனிப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இசையமைப்பாளர் தேவாவின் இசைக் கச்சேரி நடந்தது. இந்த திருமண விழாவிற்காக பிரம்மாண்டமான முகப்பு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றுச்சாலை தொடக்கத்தில் இருந்து திருமணம் நடைபெற்ற இடம் வரை முழுவதும் ஆயிரக்கணக்கான கட்சி கொடிகளும், வாழை மரங்களும் கட்டப்பட்டிருந்தன.

அமைச்சரின் மதுரை கிழக்குத் தொகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் திருமணத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். நேற்று மாலை நடந்த வரவேற்பில் 50 ஆயிரம் பேருக்கு விருந்தும் நடைபெற்றது. பல கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட அமைச்சர் மூர்த்தி மகனின் திருமணத்தைக் கண்டு திமுக தலைவர்கள் மட்டுமின்றி தொண்டர்களும் வியந்து பேசி வருகிறார்கள்.