கோவையில் கஞ்சா சாக்லேட்... விற்பனை கும்பலுக்கு போலீஸ் வலை

 

கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில், கஞ்சா பயன்பாடு இருப்பதாகவும், கஞ்சாவை சாக்லேட் வடிவத்தில் விற்பனை செய்வதாகவும், போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி தலைமையில் தனிப்படை அமைத்து, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தெப்பக்குளம் அருகே பைக்கில் சுற்றிய வாலிபரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கேத்தன் குமார் (30) என்பதும், கோவையில் டீக்கடையில் பணிபுரிந்து கொண்டே சில பள்ளி, கல்லுாரிகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அவர் பதுக்கி வைத்திருந்த, 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 35 கிலோ கஞ்சா சாக்லேட் பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தவிர, ரூ, 2.94 லட்சம் மத்திப்புள்ள தடை செய்யப்பட்ட 140 கிலோ குட்கா, பான் மசாலா ஆகியவையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர் பயன்படுத்தி வந்த பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கஞ்சாவை, சாக்லேட் போல மாற்றி, அதன் மீது வழக்கமான மிட்டாய் கவர் சுற்றி விடுகின்றனர். வெளிப்பார்வைக்கு மிட்டாய் போலவே தெரியும். சுவைத்துப் பார்த்தால் தான் கஞ்சா சாக்லேட் என்பதை கண்டுபிடிக்க முடியும். பிற மாவட்டங்கள், மாநிலங்களிலும் இவர்களது நெட்வொர்க் இருக்க வாய்ப்புள்ளது” என்றனர். இதில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.