பட்டாசு ஆலையில் தீ விபத்து!  3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்!

 

கடலூர் எம்.புதூர் பகுதியில் சம்பா என்ற இடத்தில் வாண வேடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் பணியாற்றி வருகின்றனர். பண்டிகை நாட்களில் இந்த தொழிற்சாலையில் பட்டாசு தயாரிப்பு அமோகமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தொழிற்சாலையில் திடீரென்று பட்டாசுகள் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்தில் அங்கு தயாரிக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடித்து தீமளமளவென அதிகரிக்கத் தொடங்கியது. விபத்தில் சிக்கி பெரியகரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா (வயது 35), நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா (வயது 50) மற்றும் மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் (வயது 34) ஆகிய 3 பேர் தீயில் கருகி உடல் சிதறி பரிதாபமாக பலியானார்கள். 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் தீயணைப்புத் துறை அதிகாரிகள் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தீ மேலும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் தீயணைப்புத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 2 பேர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டாசு ஆலையில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது? மின்கசிவு காரணமா? அல்லது பணியாளர்களின் அலட்சியமா அல்லது வேறு ஏதேனும் சதியா என்பது போன்ற  பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தீ விபத்து சம்பவத்தால் சம்பா பகுதியில் பெரும் சோகமும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெடி விபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், எம்.புதூர் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெரியகரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா (வயது 35), நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா (வயது 50) மற்றும் மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் (வயது 34) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனை அடைந்தேன்.

எனவே உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலையும் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், வெடி விபத்தில் காயமடைந்த நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தா என்பவருக்கு கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.3 லட்சம் ரொக்கம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.