கர்ப்பிணிகளுக்கான மருத்துவ முகாமில் யோகா செய்து அசத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

 

கர்ப்பிணிகளுக்கான இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவ முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் யோகா செய்து அசத்தினார்.

நீலகிரி மாவட்டம் உதகை தலைக்குந்தா பகுதியில் உள்ள தோடர் இன மக்களின் மலைகிராமப்பகுதியான முத்தநாடு மந்துவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் தொலைதூர கிராமங்களுக்கு சென்று மருத்துவ சேவை செய்யும் நடமாடும் மருத்துவக்குழு வாகன சேவையை இன்று பார்வையிட்டனர்.

இதில் முத்தநாடு மந்து தோடர் இன மக்களின் வீடுகளுக்கு சென்று மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கினர். சுகாதாரத்துறை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இயன்முறை செய்வதை பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து நடமாடும் மருத்துவ வாகனத்தில் பரிசோதனை செய்யும் சிகிச்சை முறைகள் மற்றும் பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதையும் பார்வையிட்டனர்.

மேலும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் ஆயுஷ்மான் பாரத் நல்வாழ்வு தின விழாவை முன்னிட்டு, கர்ப்பிணிகளுக்கான இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவ முகாம் நடைபெற்றதை பார்வையிட்டனர்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் யோகா பயிற்சி மேற்கொண்டு, மரக்கன்றுகள் நடவு செய்தார். அதனை தொடர்ந்து படுகர் இன மக்களின் பராம்பரிய கலை நிகழ்ச்சிகளையும், பழங்குடியினர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை பார்வையிட்டு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்கள்.