மரம் அறுக்கும் எந்திரத்தால் முன்னாள் காதலனை துண்டுபோட்ட காதலி...! கோவையில் பரபரப்பு

 

கோவை அருகே இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆணின் இடது கை மீட்கப்பட்ட விவகாரத்தில், பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் கடந்த 15-ம் தேதி குப்பைத் தொட்டியில் துண்டாக வெட்டப்பட்ட கை ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் துடியலூர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். துண்டாக வெட்டப்பட்ட கையை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே காட்டூர் காவல் நிலையத்தில் பிரபு என்பவர் மாயமானதாக வந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அது தொடர்பாக விசாரித்த போது துண்டிக்கப்பட்ட கைக்கு உரியவர் பிரபு என்பது தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (39). இவர், கோவை சரவணம்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் 4 வருடங்களுக்கு முன்பு சாந்தி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அவர், மாதம் 2 முறை ஈரோடு சென்று மனைவியை பார்த்து விட்டு வருவது வழக்கம். இவர், கடந்த மாதம் தனது மனைவியை பார்ப்பதற்காக ஈரோட்டுக்கு சென்று விட்டு கோவை வந்து வேலை பார்த்து வந்தார். அவர், கடந்த 14-ம் தேதி சரவணம்பட்டியில் உள்ள தனது அறையில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. 

இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சாந்தி காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பிரபுவை தேடி வந்த நிலையில், வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு ஆணின் இடது கை கிடந்தது. விரல் ரேகையை ஆய்வு செய்த போது அது காணாமல் போன அழகு நிலைய ஊழியர் பிரபுவின் கைரேகையுடன் ஒத்துபோனது.

இதைத்தொடர்ந்து பிரபு வசித்து வந்த இடம் மற்றும் சில இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், சின்னவேடப்பட்டியில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் பிரபு மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக அமுல் திவாகர், கார்த்திக், கவிதா ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கோவை அழகு நிலையத்திற்கு பணிக்கு வருவதற்கு சில வருடங்களுக்கு முன்பாக ஹெர்போஹேர் நிறுவன விற்பனை பிரதி நிதியாக இருந்த போது பிரபுவுக்கும், சரவணம்பட்டி கவிதாவுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தில் கோவைக்கு மீண்டும் வேலைக்கு வந்த முன்னாள் காதலன் பிரபுவை தனது வீட்டருகே தனி வீடு ஒன்றை பார்த்து கவிதா குடி வைத்துள்ளார்.

அந்த வீட்டில் கவிதாவுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து வைத்துக் கொண்ட பிரபு அதனை வைத்து மிரட்டி கவிதாவிடம் பணம் பெற்று வந்துள்ளான். இது குறித்து கவிதா தனது தற்போதைய காதலர்களான அமுல்திவாகர் மற்றும் கார்த்திக்கிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் பிரபுவை துண்டு துண்டாக வெட்டி வீசுவது என முடிவு செய்து மரம் அறுக்கும் எந்திரம், அதனை பயன்படுத்த சுவிட்ஜ் போர்டு, பிளாஸ்டிக் பைகள் போன்ற வற்றை வாங்கி தயாராக வைத்துக் கொண்டு 20 நாட்களாக பிரபுவை நோட்டமிட்டுள்ளனர்.

சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு கவிதாவுக்கு வீட்டில் பிரச்சனை என்று பிரபுவை செல்போனில் அழைத்துள்ளனர். பிரபு சென்றதும் அவரை தாக்கி கொலை செய்துள்ளனர். அவரது சடலத்தை வீட்டு மாடிக்கு தூக்கிச்சென்று ஏற்கனவே தயாராக வைத்துஇருந்த மரம் அறுக்கும் எந்திரத்தை வைத்து துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து மூன்று இடங்களில் வீசியது தெரிய வந்தது.

தலை, உடல் மற்றும் ஒரு கையை தனி தனி பிளாஸ்டிக் கவரில் கட்டி துடியலூர் அருகே இருந்த ஒரு கிணற்றிலும், இரு கால்களை வெள்ளலூர் குப்பை கிடங்கிலும் வீசி உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் உதவியுடன் துடியலூர் அருகே உள்ள கிணற்றில் இருந்து பிளாஸ்டிக் கவரில் தனி தனியாக அடைத்து வீசப்பட்டிருந்த தலை மற்றும் உடல் பாகங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.