விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை - மெட்ரிக்குலேசன் இயக்குனரகம்

 

தமிழ்நாடு அரசின் எச்சரிக்கையை மீறி விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று மெட்ரிக்குலேசன் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி (17). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கடந்த 13-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்து, தொடர்புடைய பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அதுவரை பள்ளிகள் இயங்காது என்று அறிவித்தது. இதற்கு கல்வித்துறை, சட்ட விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் எடுத்தது. அந்த எச்சரிக்கையையும் மீறி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 18-ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது.

இதன்படி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்த இந்த வேலைநிறுத்தத்தில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாக்குதலை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. இந்நிலையில் அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது ஏன்? என்று 987 தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிட்டது.

அரசின் அனுமதி இன்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது பற்றி பதில் அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. விளக்கத்தை கேட்ட பின் இந்த 987 பள்ளிகள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அரசின் எச்சரிக்கையை மீறி விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை என மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 18-ம் தேதி அறிவித்த விடுப்பை ஈடு செய்ய ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளிகளை இயக்குவோம் என விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகளின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த விளக்கத்தினை ஏற்று எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.