தொடர் கனமழை... நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 15) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தையொட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மிக கனமழை பெய்து வருகிறது. அதேபோல கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நீலகிரியில் தொடர் மழை காரணமாக நான்கு தாலுகா பள்ளிகளுக்கு கடந்த 2 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. கனமழையால் கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா ஆகிய தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டிருந்தார். பலத்த காற்றால் கூடலூரில் சாலைகளில் மரம் விழுந்து கேரளா, கர்நாடகாவுக்குமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 15) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்கள் மாவட்டத்தில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் எனவே இரவு நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பகல் நேரங்களிலும் தேவையில்லாமல் யாரும் வெளியில் வர வேண்டாம் என்றும், காற்றின் தாக்கம் இருக்கும் என்பதால் மரங்கள் தடுப்பு சுவர்கள் அருகில் நிற்க வேண்டாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் அறிவுறுத்தியுள்ளார்.