தமிழ்நாடு வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி!! மக்கள் உற்சாக வரவேற்பு!

 

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 187 நாடுகள் பங்கேற்பதுடன் 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இத்தகைய போட்டியானது இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. 

அதன் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தன. எனவே அதற்கான முன்னேற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

போட்டிக்கான செஸ் ஒலிம்பியாட் ஜோதி பேரணியை டெல்லியில் ஜூன் 19-ம் தேதி அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இந்நிலையில், நாடு முழுவதும் பயணித்து செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி இன்று தமிழ்நாடு வந்தடைந்தது. கோவைக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமைச்சர்கள், பொதுமக்கள், 5,00-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவை கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கு அடுத்து சேலம் மாவட்டத்திற்கு மதியம் 1 மணியளவில் இந்த ஜோதி எடுத்து செல்லப்படுகிறது.