திமுக கவுன்சிலர் தம்பி மீது கார் ஏற்றி கொலை முயற்சி: சிசிடிவியில் சிக்கிய அதிமுக பிரமுகர் கார்

 

சென்னை மடிப்பாக்கம் அருகே திமுக முன்னாள் கவுன்சிலரை கார் ஏற்றி கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மடிப்பாக்கம் அடுத்த புழுதிவாக்கம் ஜேக்கப் தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். முன்னாள் நகராட்சி தலைவரான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவருடைய மூத்த மகன் ஜெ.கே. மணிகண்டன் (46), இவர், புழுதிவாக்கம் 186-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். அதேபோல் 2-வது மகன் ஜெ.கே.பர்மன் (42), திமுக முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர்கள் இருவரும் அதே தெருவில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பர்மன் வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவர் வேலாயுதம் இவருடைய மனைவி ஹேமாவதி. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதுள்ளது. இதையடுத்து அங்கு வந்த துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த ஹேமாவதியின் உறவினர்கள், கத்தி கூச்சலிட்டு பிரச்னை செய்தனர். சத்தம்கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த பர்மன், தகராறு செய்தவர்களை சமாதானப்படுத்த முயன்றார்.

அப்போது ஹேமாவதியின் உறவினர்கள் குடிபோதையில் இருந்ததால் பர்மனிடம் அநாகரிகமாக நடந்து கொண்டனர். இதனால் பர்மனுக்கும், ஹேமாவதியின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை பர்மன், தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டபோது, அவரை பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று திடீரென அவர் மீது மோதியது. உடனே சுதாரித்து கொண்ட பர்மன், இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டினார். ஆனால் அவரை பின்தொடர்ந்து வந்த கார், பொன்னியம்மன் கோவில் திருப்பத்தில் மீண்டும் வேகமாக வந்த கார் பர்மன் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பர்மன் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பர்மனை, ஹேமாவதியின் உறவினர்கள்தான் கொலை செய்ய முயற்சித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நேற்று முன்தினம் நடைபெற்ற சண்டையின் நீட்சிதான் என தெரியவந்தது.

மேலும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வாகன பதிவெண்ணை வைத்து விசாரித்த போது அது, அதிமுக 195-வது வார்டு வட்ட செயலாளர் ராஜீ என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரித்த போது வினோத் என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே காரை விற்று விட்டதாகவும், பெயரை மாற்றாமல் பயன்படுத்தி வந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் வினோத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.