மாணவி ஸ்ரீமதியின் உடற்கூறாய்வு அறிக்கை: ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைப்பு

 
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
கனியாமூா் தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறுஉடற்கூறாய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். 
உடல் கூறாய்வு அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து பெற்றோர்கள் தெரிவிக்கவே, மாணவியின் இரண்டு உடற்கூறாய்வு அறிக்கைகளையும் மூன்று மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். 
மேலும், இரண்டு முறை உடல் கூறாய்வு செய்யும் விடியோக்களையும் மருத்துவக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தகுந்த தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்வதற்காக இரண்டு உடற்கூறாய்வு அறிக்கைகளை சிபிசிஐடி போலிஸ் ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைத்துள்ளது.