சளி, காய்ச்சலால் அனுபதிக்கப்பட்ட குழந்தை பரிதாபமாக பலி! மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்!

 

வந்தவாசி அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் 6 மாத குழந்தை உயிரிழந்துவிட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை தெருவில் வசித்து வருபவர் இப்ராஹிம். கூலி தொழிலாளியான இவருக்கு சபீனா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு முகமது ரசூல் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது. சளி மற்றும் காய்ச்சல் காரணமாக குழந்தையை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 3 நாட்களாக மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருந்த காரணத்தால் பால் குடிக்காமல் சிரமப்பட்டு வந்தது. அப்போது குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் நர்சுகளிடம் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

இதனை கேட்டும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குழந்தை இறப்புக்கு காரணமாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு மருத்துவமனை தரம் உயர்த்த வேண்டும் என்றும் உறவினர்கள் மருத்துவமனையின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த மாவட்ட இணை இயக்குனர் பொறுப்பு மருத்துவர் ஏழுமலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய விசாரணை நடத்தபடும் என்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.