ஜல்லிக்கட்டில் காளை முட்டி 14 வயது சிறுவன் பலி... பார்க்க வந்தபோது நேர்ந்த சோகம்!!

 

தடங்கம் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த 15 வயது சிறுவன் மாடு முட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் தடங்கம் கிராமத்தில் மண்டு மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. அதேபோல் 2வது ஆண்டாக இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. தடங்கம் கிராமத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே, பிஎம்பி கல்லூரி மைதானத்தில், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் தர்மபுரி மாவட்ட தலைமை அதியமான் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், நடத்தப்பட்ட இந்த போட்டியை வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் மொத்தம் 750 காளைகள் பங்கேற்றுள்ளன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன்களான பிரவீன் (15), கோகுல் (14) இருவரும் தனது மாமாவான ஹரி என்பவருடன் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்துள்ளனர். அப்போது காளைகள் வெளியேறும் இடத்தில் நின்றுகொண்டிருந்த கோகுலை காளை ஒன்று முட்டியது.

இதில் பலத்த காயமடைந்த சிறுவனை அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிறுவன் கோகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே உயிரிழந்த சிறுவன் கோகுலின் கண்கள் தானம் அளிக்க சிறுவனின் பெற்றோர் சம்மதித்த நிலையில், கண்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன.