10 மாதங்களில் 516 பேர் உயிரிழப்பு.. ரயில்வே விதிகளை மீறுவதால் விபரீதம்!

 

தமிழ்நாட்டில் விதிகளை மீறி ரயில் பாதையை கடந்ததால், இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 516 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

விபத்துகளை குறைக்க ரயில்வே கோட்டம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், ரயில்களின் இயக்கத்தால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் மட்டுமே குறைந்து வருகின்றன. ஆனால் சிக்னல்களை மீறுதல், ரயில் பாதையை கடத்தல், மொபைல் போனில் பேசியபடி ரயில் பாதையை கடத்தல் உள்ளிட்ட விதிமீறல்களால் நிகழும் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதன் காரணமாக சென்னை ரயில்வே கோட்டத்தில், இந்த ஆண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான, 10 மாதங்களில் மட்டும் 516 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, ரயில் நிலையங்களில் உள்ள சுரங்கப்பாதை, நடைமேம்பாலங்களை பயன்படுத்தாமல் பயணியர் சிலர், விதிகளை மீறி ரயில்பாதையை கடந்து செல்கின்றனர். சமீபகாலமாக, மொபைல் போனில் பேசியபடி, ரயில்பாதையை கடப்பதால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், விதிகளை மீறி ரயில் பாதையை கடந்து சென்ற தால், ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை, 516 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர், மதுபோதையில் ரயில் பாதையில் தவறி விழுந்து இறந்துள்ளனர்.

விதிகளை மீறுவோர் மீது ரயில்வே பாதுகாப்பு படை வாயிலாக அபராதம் விதிக்கப்படுகிறது. ரயில் நிலையங்களில் பயணியரிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம் என்று அவர்கள் கூறினர்.