கிணற்றில் வீசப்பட்ட 5 ஆயிரம் அரசு பள்ளி சீருடைகள்.. பெற்றோர்கள் அதிர்ச்சி!

 

கந்தர்வகோட்டை அருகே பாழடைந்த கிணற்றில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி சீருடைகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புதிய பேருந்து நிலையம் பின்புறம் பகுதியில் இடுகாடு அமைந்துள்ளது. இங்கு ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவ்வழியாக விவசாயத்திற்கு சென்ற விவசாயிகள் சிலர், அங்கிருந்து பாழடைந்த கிணறு ஒன்றில் அரசுப் பள்ளி சீருடைகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் அவர்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் பார்வையிட்ட போது, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீருடைகள் அங்கு கிடந்தது தெரியவந்தது. சில சீருடைகள் தீயில் எரிந்து நாசமான நிலையில் கிடந்ததால், மர்ம நபர்கள் அந்த துணிகளுக்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை வழங்கக்கூடிய சீருடைகள் அங்கு கிடந்துள்ளது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது. இதைக் கொண்டு வந்து கொட்டியவர்கள் சீமை கருவேல காட்டுப்பகுதியில் அவற்றை தீ வைத்து எரிக்க முயன்றது தெரியவந்துள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் நிலையில், அவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடையை கல்வித்துறை அதிகாரிகள் ஏன் வழங்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.