கடப்பா கல் சரிந்து விழுந்து 4 வயது சிறுவன் பலி.. சாத்தூரில் பயங்கரம்

 

சாத்தூர் அருகே 4 வயது பிஞ்சு குழந்தை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிச்சாமி. இவர் கட்டுமான பணிகளுக்காக ஏழாயிரம் பண்ணை பகுதிக்குச் சென்று கடப்பா கல், சிங் தொட்டி, சிமெண்ட் மூட்டை ஆகியவற்றை லோடு ஆட்டோவில் வாங்கி வந்துள்ளார். இதற்காக செல்லும் போது தன்னுடைய மகன்களான கபிலன் ஆர்யா, விஜயதர்ஷன் (4) ஆகிய 2 சிறார்களையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

மினி லாரியில் ஒரு பக்கத்தில் கடப்பா கல், சிங் தொட்டி, சிமெண்ட் மூட்டை ஆகியவை அடுக்கி வைக்கப்பட்டு விஜயதர்ஷன் உள்ளிட்ட இரண்டு சிறுவர்களையும் அமர வைத்து மினி லோடு வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது  தனியார் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது திடீரென பேருந்தின் பின்பக்கத்தில் லோடு வேன் மோதி விபத்து ஏற்பட்டது.

லோடு வேன் மோதிய வேகத்தில் அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடப்பா கல் சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் 4 வயது சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும், கபிலன் ஆர்யா பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளான்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏழாயிரம் பண்ணை போலீசார், விபத்தில் பலியான 4 வயது சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 4 வயது பிஞ்சு குழந்தை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.