சென்னை இளைஞர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலி... ஆந்திரா 'கோனா' அருவியில் நேர்ந்த சோகம்!!

 
Andhra

ஆந்திராவில் அருவியில் குளிக்கச் சென்ற சென்னையைச் சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாகலாபுரத்தில், பூபதியேஸ்வர கோனா அருவி உள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள இந்த அருவியில் குளிக்க, தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமானோர் செல்வது வழக்கம். அதன்படி சென்னையில் இருந்து இளைஞர்கள் 5 பேர், கோனா அருவிக்குச் சென்றுள்ளனர். 

swim

அவர்கள், அங்குள்ள பாறையில் ஏறி தண்ணீரில் குதித்துள்ளனர். அப்போது நீண்ட நேரமாகியும் 3 பேர் வெளியே வராததால் சக நண்பர்கள் பதற்றம் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீட்பு குழுவினருடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கிய 3 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடலுக்கு பின், 3 பேர் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர். விசாரணையில், தண்ணீரில் மூழ்கி பலியான 3 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களான மாதவன், நவீன், கார்த்திக் பிரசாத் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.