புதிய ரேஷன் கார்டுக்கு காத்திருக்கும் 3 லட்சம் பேர்.. வெளியான முக்கிய அறிவிப்பு!

 

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது

தமிழ்நாட்டை பொறுத்தவரை தற்போது சுமார் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் இருக்கின்றன. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மானிய விலையிலும், விலையில்லாமலும் அரிசி சர்க்கரை, பருப்புகள், பாமாயில் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு இருந்தால் பல்வேறு சலுகைகள் பெறலாம். அரசு அறிவிக்கும் பொங்கல் பரிசு, நிவாரண தொகைகளை பெற முடியும். இதுதவிர அரசின் நிதி மானியங்களையும் பெற முடியும்.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் ரேஷன் கார்டுகள் அனைத்தும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றி வழங்கப்பட்டன. அதாவது ஆதார் மற்றும் செல்போன் எண் இணைக்கப்பட்டு இந்த ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டன. இதற்கிடையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்பாட்டுக்கு வந்த வேளையில் ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களை பிரித்து கொண்டு புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். அதனால் புதிய கார்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதன்பின் மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி நடந்தது.

இதனிடையே புதிய ரேஷன் கார்டு கோரி 2 லட்சத்து 81 ஆயிரம் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களின் மீது தொடர்ந்து பரிசீலனை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக புதிய அட்டைகள் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) மீண்டும் புதிய அட்டை வழங்கும் பணி தொடங்கவுள்ளது. மே 2021 முதல் இதுவரை 15 லட்சத்து 79 ஆயிரத்து 393 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் குடும்ப அட்டை மாற்றம், புதிய அட்டைக்காக பொதுமக்கள் அலைய வேண்டியதை குறைக்கும் வகையில் www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், சோப்பு, முகத்துக்கு போடும் கிரிம் அறிமுகப்படுத்த திட்டம். நிதி நெருக்கடியால் பருப்பு மற்றும் பாமாயில் விலையை ரேஷன் கடைகளில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.