மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் துடிதுடித்து பலி.. சென்னை அருகே பெரும் சோகம்!

 

வண்டலூர் அருகே மின்சார ரயிலில் அடிபட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம்  தொப்பூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சம் பண்ணன். இவரது இளைய சகோதரர் அனுமந்தப்பா ஆகிய இருவரும் தமிழ்நாட்டில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.  இவர்கள் சென்னை புறநகர் பகுதியில் அனுமன், ராமர் உள்ளிட்ட வேடங்களை போட்டுக் கொண்டு யாசகம்   தொழிலாக வைத்து வந்துள்ளனர். தற்போது இவர்கள் செங்கல்பட்டு மாவட்டம்  வண்டலூர் அடுத்துள்ள  ஊரப்பாக்கம் பகுதியில்  உள்ள செல்லியம்மன் கோவில் தெரு பகுதியில் தங்கள் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இதில் சஞ்சம் பண்ணன் என்பவருக்கு சுரேஷ் (15), ரவி (10) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் சுரேஷ் என்ற சிறுவன் காது கேட்காத மாற்றுத்திறனாளி, அதே போன்று ரவி என்ற சிறுவன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று அனுமந்தப்பாவிற்கு மஞ்சுநாத் (11) என்ற மகனும் உள்ளனர். சிறுவர்கள் மூன்று பேரும் கர்நாடக மாநிலத்தில் தங்களது, பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கல்வி பயின்று வருகின்றனர்.

ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறையையொட்டி தாய் தந்தையுடன் விடுமுறை செலவு செய்வதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருந்து ஊரப்பாக்கம் வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று ஊரப்பாக்கம் அருகே ரயில்வே தண்டவாளத்தின் அருகே விளையாடிக் கொண்டே ரயில்வே தண்டவாளத்திற்கு வந்துள்ளனர். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் 3 சிறுவர்கள் மீது மோதியது.

மூன்று சிறுவர்களும் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். கொடூரமாக நடைபெற்ற இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 சிறுவர்களும் துடிதுடித்து உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், அருகே இருந்த பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே போலீசாரம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.