சத்துணவு சாப்பிட்ட 27 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி!!
நாகர்கோவில் பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவை உண்டு 27 மானவிகள் மயக்கமிட்டு விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1,300 க்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு நூற்றுக்கணக்கான மாணவிகள் தினமும் சத்துணவு சாப்பிடுவது வழக்கம். இன்று மதியம் மாணவிகளுக்கு சாதம், சாம்பார், முட்டை ஆகியவை சத்துணவாக வழங்கப்பட்டன.
மதிய உணவு இடைவேளைக்குப் பின்பு வழக்கம்போல் வகுப்புகள் இயங்கின. இந்நிலையில் சத்துணவு சாப்பிட்ட 6, 7 மற்றும் 8-ம் வகுப்பை சேர்ந்த 27 மாணவிகள் திடீரென வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். சிலர் மயங்கியும் விழுந்தனர். இதனை கண்ட ஆசிரியர்கள் இது குறித்து உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததோடு ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் சக மாணவிகள் உதவியோடு மாணவிகளை மீட்ட ஆசிரியர்கள் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தகவல் அறிந்த தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று மாணவிகளை பார்த்து அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். மருத்துவக் கல்லூரி அதிகாரி தலைமையில் மருத்துவர் குழு ஒன்று அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
நாகர்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும், லேசான அலர்ஜி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அவர்கள் வீட்டிற்கு திரும்பி விடுபவர்கள் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறினார்