ஜாக்கி மூலம் தூக்கப்பட்ட 2 அடுக்கு கட்டடம்... சரிந்து விழுந்து தொழிலாளி பலி..! சென்னையில் அதிர்ச்சி

 

தாம்பரம் அடுத்த சேலையூரில் 2 அடுக்கு கட்டடத்தை ஜாக்கி மூலம் தூக்கிய போது மேற்கூரை சரிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சேலையூர் கர்ணம் தெருவில் வசித்து வருபவர் லட்சுமி. இவருக்கு சொந்தமான 2 அடுக்குமாடி வீட்டின் தரைதளத்தை தனியார் நிறுவனம் மூலம் உயர்த்த முடிவு செய்தனர். அதன்படி, உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த 11 கூலி தொழிலாளர்கள் ஜாக்கி மூலம் 2 அடி உயர்த்த முடிவு செய்து அதற்கான பணி நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், அதிகாலையில் இருந்து நடைபெறும் இந்த பணி நடைபெறும் நிலையில் திடீரென மேற்கூரை பகுதி மட்டும் சரிந்து விழுந்தது. அந்த இடிபாட்டில் 3 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதனைத் தொடர்ந்து தாம்பரம், மேடவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் மற்றும் மேடவாக்கம் பகுதி தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு 3 தொழிலாளிகளை மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். அதில் பேஸ்கர் (28) என்பவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். மேலும் மற்றொரு தொழிலாளி ஓம்கார் என்பவருக்கு கால் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மற்றொருவர் லேசான காயங்களோடு மீட்கப்பட்டார்.

பின்னர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிடத்தை உயர்த்தும் பணியின் போது கட்டிட பொறியாளர் அருகில் இல்லை என்றும், கூலி தொழிலாளர்களுக்கு முறையாக தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.