பைக் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் பலி.. தியான வகுப்பிற்குச் சென்றபோது நிகழ்ந்த சோகம்!

 

திருப்பத்தூரில் தியான வகுப்புக்கு சென்ற வாலிபர்கள் சாலை விபத்தில் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் முல்லை பகுதியைச் சேர்ந்தவர் முருகேஷ். இவரது மகன் பிரவீன் குமார் (27). அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் அருள்குமார் (24). இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் , திருப்பத்தூர் பகுதியில் நடக்கும் தியான வகுப்புக்கு தினமும் பைக்கில் ஒன்றாக சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் இருவரும் தியான வகுப்புக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது, திருப்பத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆலங்காயம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பள்ளி வாகனம் வந்ததால் இருசக்கர வாகனத்தில் வந்த இந்த 2 வாலிபர்களும் அதை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.

அப்போது எதிரில் வந்த அரசு பேருந்து இவர்களது பைக் மீது மோதியதில் பிரவீன் குமார், அருள்குமார் ஆகியோர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குருசிலாப்பட்டு போலீசார், விபத்தில் உயிரிழந்த 2 வாலிபர்களின் சடலங்களையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.