1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

 

சீர்காழி தாலுகாவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களாக வடகிழக்குப் பருவ மழை தீவிரமாகப் பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை பாதிப்பு காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள 1 முதல் 8-ம் மாணவர்களுக்கு மட்டும் இன்று (நவம்பர் 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழை பெய்த காரணத்தினால் பள்ளிகளில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக சீர்காழி தாலுகாவில் உள்ள 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இன்று (நவ. 18) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயம் மாவட்டத்திலுள்ள மற்ற பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.