டூவீலர் விபத்தில் 13 வயது சிறுவன் மரணம்.. உடல் உறுப்புகள் தானம்.. குடும்பத்தினருக்கு மருத்துவர்கள் பாராட்டு!

 

ஆம்பூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த 13 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை சிறுவனின் குடும்பத்தினர் தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஆர்மாமலை கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன். விவசாயியான இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு நித்யா என்ற மகளும், வெங்கடேஸ்வரன் (16), சந்தோஷ் (13) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இதில், சந்தோஷ் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் சந்தோஷ் கடந்த 27ம் தேதி காலை 9 மணியளவில் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ராணிப்பேட்டை மாவட்டம் நாராயணகுப்பம் அருகே விபத்து ஏற்பட்டு பலத்த படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்‌ அனுமதித்தனர்.

இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவவன் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சந்தோஷின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோர் முன்வந்தனர்.

இதைத்தொடர்ந்து அவரது இதயம் மற்றும் அவரது 2 நுரையீரல்கள் மற்றும் ஒரு சிறுநீரகம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், ராணிப்பேட்டை சிஎம்சி வளாகத்துக்கு ஒரு சிறுநீரகமும், கல்லீரல் மற்றும் கண்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும், அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உறுப்பு தானம் செய்த சிறுவனின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது.