மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட 12 வயது சிறுமி பலி.. மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை.. சிவகங்கையில் அதிரச்சி!

 

சிவகங்கை அருகே மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் வன்னிமுத்து. இவரது மனைவி முத்தம்மாள். இவர்களுக்கு சுவாதி (13), ஸ்வேதா (12), வனிதா (10) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மூவரும் தமராக்கி அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர். வன்னிமுத்து மரம் வெட்டும் தொழிலாளியாக உள்ளார். அவரது மனைவி முத்தம்மாள் தினக்கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில், நேற்று மரவள்ளிக்கிழங்கு அறுவடை வேலைக்கு முத்தம்மாள் சென்றிருந்தார். இதனால் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது சிறிதளவு மரவள்ளிக்கிழங்கை எடுத்து வந்துள்ளார். அதனை குழந்தைகளுக்கு சிப்ஸ் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் மூவரும் அதை பச்சையாக சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. 

மூவரும் உறங்கச் சென்ற நிலையில், இரவு ஒரு மணி அளவில் திடீரென இரண்டு குழந்தைகளுக்கும் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு உள்ளனர். அதில் ஸ்வேதா (12) என்ற சிறுமி வீட்டிலேயே உயிரிழந்தார். இதையடுத்து வனிதா மற்றும் சுவாதியை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த சிவகங்கை போலீசார், ஸ்வேதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்ககை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.