11 பேர் உடல் சிதறி பலி.. அரியலூர் அருகே பாட்டாசு ஆலை கோர விபத்து!

 

அரியலூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள வெ.விரகாலூர் கிராமத்தில் திருமழபாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55), இவர் தீபம் என்ற பெயரில் நாட்டு வெடி தயாரிக்க கூடிய பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். ஆலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மெயின் ரோட்டில் யாழ் அன் கோ என்ற பெயரில் வெடிகள் விற்பனை செய்வதற்கான கடையும் நடத்தி வருகிறார்.

இவரது ஆலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து பத்துக்கும் மேற்பட்டவர்கள், தஞ்சாவூர் திருவையாறை சுற்றியுள்ள பகுதியிலிருந்து 10 பேர், விரகாலூர் கிராமத்தில் உள்ள அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் 10 பேர் என ஆண்கள், பெண்கள் என முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இரவு பகலாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் ஆலையிலிருந்து வெடி குண்டு வெடித்ததை போன்று சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகினர். அதன் பின்னரே பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

ஒரு குடோனில் வெடி வெடித்து தீ அடுத்த குடோனுக்கும் பரவியதால் அடுத்தடுத்த குடோன்களிலும் வெடித்தது. இதனால் பட்டாசு சத்தம் கேட்டு கொண்டே இருந்ததுடன் அந்த இடமே புகைமண்டலமாக மாறியது. உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன ஆனதோ என பலரும் பதறினர். வெடி விபத்து ஏற்பட்ட தகவல் எங்கும் பரவியது. இதனை தொடர்ந்து பல ஊர்களிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க மணிக்கணக்கில் போராடினர்.

தீ அணைத்த பிறகு பலரும் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். பலர் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். உடனடியாக இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு தஞ்சாவூர் மற்றும் அரியலூரில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த கோர விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 11 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயமைடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.