மர்ம காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் பலி.. சென்னையில் சோகம்!

 

சென்னையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள சென்னீர்குப்பம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் புவியரசன். இவரது மகன் சக்தி சரவணன் (10). இவர், கடந்த சில தினங்களாக, கடுங்காய்ச்சலுக்கு உள்ளான நிலையில், பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் காய்ச்சல் விடாத நிலையில், வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதன்பின்னரும் காய்ச்சல் குறையாத காரணத்தால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு எழுப்பூரில் உள்ள குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிறுவனுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்த நிலையில், டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த சிறுவன் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது பெற்றோர்கள் அந்த சிறுவனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தம் பணிகள் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சிறுவனுக்கு டைபாய்டு காய்ச்சல் இருந்ததாகவும் மஞ்சள் காமாலையோடு சேர்ந்து சிறுநீரக தொற்று ஏற்பட்டதால் சிறுவன் இறந்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளதாகவும் மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவன் எந்த காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான் என்பது குறித்து மருத்துவர்கள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

தற்போது இந்தப் பகுதியில் வேறுயாருக்கும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்று பூவிருந்தவல்லி சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் துப்புரவு பணிகளும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் முறையாக குப்பைகள் மற்றும் கொசு மருந்துகள் அடிகாததே காய்ச்சலுக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.