அரசு துறையில் 10,402 காலிப் பணியிடங்கள்.. 3 மாதங்களில் நிரப்ப அரசு அனுமதி!!

 

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 10,402 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு துறைகளில் காணப்படும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, பின்னடைவுப் பணியிடங்கள், சிறப்பு ஆட் சேர்ப்பு முகாம் வழியே நிரப்பப்படும் என, ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்த, தலைமைச் செயலகத் துறைகளிடம் இருந்து, தொகுதி வாரியாக உறுதி செய்யப்பட்டு பெறப்பட்ட எண்ணிக்கை அடிப்படையில், ஆதிதிராவிடருக்கு 8,173 இடங்கள், பழங்குடியினருக்கு 2,229 இடங்கள் என, மொத்தம் 10,402 இடங்கள் கண்டறியப்பட்டன.

இந்த காலிப் பணியிடங்களை 3 மாதங்களில் நிரப்ப வேண்டும் என்று பட்டியல் வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர் அருண் ஹல்தார் அறிவுறுத்தியுள்ளார்.

ஆயத்தீர்வைத் துறை, உள்துறை ஆகியவற்றில் அதிகபட்சமாக 6,841 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், எரிசக்தித்துறையில் 228 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் சென்னையில் நேற்று  செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார். இதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்வதாக மாநில அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  டி.எஸ். ஜவஹர் உறுதி அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று  நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பட்டியல் வகுப்பினருக்கு எதிரான 13 சம்பவங்கள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் இவற்றில் 10 சம்பவங்களுக்கு சுமூகதீர்வு காணப்பட்டதாகவும் கூறினார். மற்ற 3 சம்பவங்கள் தொடர் விசாரணைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டு பட்டியல்  வகுப்பினருக்கான தேசிய ஆணையம் தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பட்டியல் வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் சுனில்குமார் பாபு, மாநில அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ். ஜவஹர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.