பகீர் வீடியோ.. விடுதிக்குள் வேகமாக பாய்ந்த கார்.. பெண் பலி!

 

கோவாவில் கார் மோதியதில் தங்கும் விடுதியின் பெண் உரிமையாளர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவா மாநிலம் வஹடார் பகுதியில் தங்கும் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை இரவு விடுதியின் உரிமையாளரான ரெமிடியா மேரி (57) விடுதி வளாகத்தில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது, அங்கு வேகமாக வந்த கார் விடுதிக்குள் புகுந்தது. கார் விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் விடுதி உரிமையாளர் ரெமிடியா மேரி படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட விடுதி ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெமிடியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் கார் டிரைவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.