ஆற்றில் கிடைத்த மனித உடல் பாகங்கள்.. மரபணு பரிசோதனை.. வெற்றி துரைசாமியின் உடலா?
வெற்றி துரைசாமியை தேடும் பணி தொடர்வதாகவும் ஆற்றங்கரையோரம் கிடைத்த மனித உடல் பகுதி மரபணு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது எனவும் இமாச்சல பிரதேச போலீஸ் தெரிவித்துள்ளது.
எம்ஜிஆரின் அபிமானி, அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் சைதை துரைசாமி. சென்னைக்கு 48-வது மேயராக சைதை துரைசாமி 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அதிமுகவின் முதல் சென்னை மேயர் சைதை துரைசாமி என்ற பெருமையை பெற்றார். இவர் மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும் வெற்றி துரைசாமி என்ற மகனும் உள்ளனர்.
45 வயதான வெற்றி துரைசாமி தொழில் அதிபர் ஆவார். சினிமா துறையிலும் ஆர்வம் கொண்ட வெற்றி துரைசாமி கடந்த 2021-ம் ஆண்டு விதார்த், ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான ‘என்றாவது ஒரு நாள்’ என்ற படத்தையும் இயக்கினார். பிரபல இயக்குநர் வெற்றிமாறனிடம் பயிற்சி பெற்ற வெற்றி துரைசாமி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு இமாசல பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார்.
வெற்றி துரைசாமியுடன் அவரது உதவியாளரான கோபிநாத் என்பவரும் உடன் சென்றிருந்தார். சுற்றுலாவை முடித்து விட்டு சென்னை திரும்புவதற்காக நேற்று, வெற்றி துரைசாமி அங்குள்ள விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டார். காரை டென்சின் என்பவர் ஓட்டினார். கார் கஷங் நாலா என்ற மலைப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரனமாக கார் தாறுமாறாக ஓடி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சட்லஜ் ஆற்றுக்குள் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்தவர்களும் படுகாயமடைந்தனர். மேலும், காரின் சக்கரங்கள் நீரில் இருந்து வெளியே தெரிந்ததன் காரணமாகவே இந்த விபத்து வெளியில் தெரிந்துள்ளது.
அந்த வழியாக சுற்றுலா சென்றவர்கள் தான் கார் ஏதோ தண்ணீருக்கு கிடப்பதாக பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் அந்த காரை மீட்ட போது அதில் ஓட்டுநர் டென்சின் சடலமாக மீட்கப்பட்டார். கார் விழுந்த வேகத்தில் கீழே விழுந்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். எனினும், காரில் பயணம் செய்த வெற்றியின் நிலை என்ன என்பதுதான் தெரியவில்லை. இதனால், அவரை சட்லஜ் நிதியில் படகில் சென்று தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். கடுமையான பனிப் பொலிவு இருந்ததால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து இமாச்சல் பிரதேச போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மகன் விபத்தில் சிக்கி மாயமான தகவல் அறிந்தும் இமாசல பிரதேசத்திற்கு சைதை துரைசாமி புறப்பட்டு சென்றார். சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த பலர் இமாசல பிரதேசத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களும் மீட்புப் பணிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இதேபோல் வெற்றி துரைசாமி குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 1 கோடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், ஆற்றங்கரையில் இருந்து மனித உடல் பகுதி மீட்டெடுக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் ஆற்றங்கரையோரம் கிடைத்த மனித உடல் பகுதி மரபணு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் இன்னொரு புறம் இமாசல பிரதேச போலீசார் வெற்றி துரைசாமியை தொடர்ந்து தேடி வருகின்றனர். என்.டி.ஆர்ப், ஐடிபிபி, ஊர்க்காவல் படை, காவல்துறையினர் உள்ளிட்டோர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று இமாச்சல் பிரதேச போலீசார் தெரிவித்தனர்.